சர்தார் வல்லப்பாய் படேல் 
1வது இந்திய துணைப் பிரதமர் பதவியில்
15 ஆகத்து 1947 – 15 டிசம்பர் 1950முன்னையவர் உருவாக்கப்பட்டது பின்னவர் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் உள்துறை அமைச்சர் பதவியில்
15 ஆகஸ்டு 1948 – 15 டிசம்பர் 1950பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னையவர் உருவாக்கப்பட்டது பின்னவர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு 31 அக்டோபர் 1875
நடீயாத், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இப்போது இந்தியா)இறப்பு 15 திசம்பர் 1950 (அகவை 75)
மும்பை, இந்தியாதேசியம் இந்தியர் அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு பிள்ளைகள் மனிபன் படேல், தாயாபாய் படேல் முன்னாள் மாணவர் மிடில் டெம்பில் தொழில் வழக்கறிஞர் சமயம் இந்து சமயம்
சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel, குஜராத்தி: વલ્લભભાઈ પટેલ, இந்தி: सरदार वल्लभभाई पटेल) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழிப் போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் முக்கியமானவராக இருந்தார்.[1] இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகின்றார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு
சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். இவரை அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.
1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில்(மும்பை) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார்.
சாதனைகள்
சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்பக் காரணமாக இருந்தவர். அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி செய்ததன் மூலம் பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார். சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
- குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக அரசு பணிந்தது, வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது.
- பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
- வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
- சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
- நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
- அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.
- 75-ஆம் வயதில் இறந்தார். 1991-இல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஒற்றுமைக்கான சிலை

சர்தார் வல்லபாய் படேல் நினைவாக ஒற்றுமைக்கான சிலை நர்மதா மாவட்டம்
முதன்மைக் கட்டுரை:
இவருடைய நினைவாக குஜராத் மாநிலத்தில் ஓடும் நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதா நதிக்கரையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் 143 வது பிறந்த நாளில் ஒற்றுமைக்கான சிலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும் 182 மீட்டர் (597 அடி).
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம்
சர்தார் வல்லபாய் படேல் தேசிய நினைவகம் (Sardar Vallabhbhai Patel National Memorial) வல்லபாய் படேலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சி மையமாகும். இந்த நினைவகமானது 1618 மற்றும் 1622 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முகலாய பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனையான மோதி ஷாஹி மஹாலில் செயல்பட்டு வருகிறது. இது குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஷாஹிபாக் என்னும் இடத்தில் சிவில் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. இது நன்கு அமைக்கப்பட்ட தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது.
வரலாறு
இந்த அரண்மனை 1622ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1616 ஆண்டு முதல் 1622ஆம் ஆண்டுக்கிடையே உள்ள காலகட்டத்தில் கட்டப்பட்டது. அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது ஏழை மக்களுக்கு வேலை தருவதற்காக இது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரச மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில், சபர்மதி ஆற்றின் கரையில், தனித்தனி தோட்டங்கள், குளியல் மற்றும் நீரூற்றுகளுடன், ஜனனா அல்லது பெண்கள் அரண்மனை இருந்தது. 1638 ஆம் ஆண்டில் அங்கிருந்த ஷாஹி பாக் தோட்டம் மிகப் பெரியதாக இருந்தது, ஒரு பெரிய சுவரால் மூடப்பட்டிருந்தது, அதில் தண்ணீர் நிரம்பிய பள்ளங்கள், ஒரு அழகான வீடு மற்றும் மிகவும் பெரிய அறைகள் இருந்தன. 1666 ஆம் ஆண்டில் தெவனோட் அனைத்து வகையான மரங்களும் நிறைந்த கிங்ஸ் தோட்டத்தைக் அங்கு கண்டார். பாரிஸில் உள்ளதைப் போன்ற வடிவில் ஒரு அவென்யூ வழியாக இந்த சாலை அமைந்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அகமதாபாத் கன்டோன்மென்ட் நிறுவப்பட்டபோது இந்த அரண்மனை பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பின்னர் தொடர்ந்த அது அரச நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. வில்லியம்ஸ் என்பவரால் 1835 ஆம் ஆண்டுவாக்கில் சில கட்டங்கள் மேலும் கட்டப்பட்டன. அவற்றுள் பல அறைகள் மாடிகள் உள்ளிட்டவை அடங்கும். நீதிமன்றத்தின் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான குடியிருப்புகள் பின்னர் சேர்க்கப்பட்டன. 1875 ஆம் ஆண்டின் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின்போது, ஆற்றின் தெற்கே நகரை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் வலுவான கல் சுவர் சற்று சேதம் அடைந்தது. தோட்டத்தின் பல பகுதிகள் அப்போது அழிந்துபோயின.
இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்த அரண்மனை 1960 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை குஜராத் ஆளுநரின் அலுவலகபூர்வ இல்லமான ராஜ் பவன் ஆக செயல்பட்டு வந்தது. குஜராத் அரசு 1975 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது அவருடைய புகழைப் பறைசாற்றும் வகையில் நினைவுச்சின்னம் மார்ச் 7, 1980 ஆம் நாளன்று நிறுவப்பட்டது.
கட்டிடக்கலை
மோதி ஷாஹி மஹால் முகலாய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் டக்ளஸ் இது பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டுவதற்கு ஷாஜகானை தூண்டியது என்று கூறுகிறார். நான்கு தூண்கள் ஒரு தளம் மற்றும் அரண்மனையின் மைய மண்டபம் ஆகியவை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டு இது அமைந்துள்ளது.

அருங்காட்சியகத்திற்கு வெளியே படேலின் சிலை.
காட்சிப் பொருள்கள் சர்தார் சரோவர் திட்டம்

படேலின் தனிப்பட்ட கலைப்பொருட்கள்
குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய நர்மதா நதி பள்ளத்தாக்கில் ஒரு பெரிய அணை மற்றும் நீர்மின்சார நிலையங்கள் அமைக்க உருவாக்கப்பட்ட சர்தார் சரோவர் திட்டத்திற்காக ஒரு பெரிய அறையும், மற்றொரு அறையும் தரைதளத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் ஒரு பெரிய அறை மற்றும் துணை மண்டபம் காணப்படுகின்றன. அறையில் படங்கள், கிராபிக்ஸ், புத்தகங்கள், புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் உள்ளன - அதன் தொடக்க காலம் தொடங்கி, அதன் தொழில்நுட்ப விவரங்கள், கட்டுமானம் உள்ளிட்ட பல விவரங்களோடு தற்போதைய செயல்பாடு குறித்தவையும் அங்கு உள்ளன.
சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி
சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி (Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA) இந்தியக் காவல் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு,பயிற்சி வழங்கும் முதன்மை காவல் பயிற்சி நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில் அமைந்துள்ளது.[1]இந்த அகாதமி உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
வரலாறு
முதலில் மத்தியக் காவல் பயிற்சிக் கல்லூரி எனும் பெயரில், 15 செப்டம்பர் 1948 அன்று இராஜஸ்தான் மாநிலத்தின் அபு மலையில் துவக்கப்பட்டது. 1967-இல் இதன் பெயரை தேசியக் காவல் அகாதமி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமாராகவும், உள்துறை அமைச்சராகவும் செயல்பட்ட சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, தேசியக் காவல் அகாதமியின் பெயரை 1974-இல் சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1975-இல் இப்பயிற்சி நிலையத்தை அபு மலையிலிருந்து, ஐதராபாத் நகரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
வளாகத்தின் அமைவிடம்
சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமி, பெங்களூர்- ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலை எண் 44-இல், ஐதராபாத் நகரத்திற்கு வெளியே எட்டு கிலோ மீட்டர் தொலைவில், 277 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
பயிற்சி
இந்தியக் குடியியல் பணித் தேர்வில் இந்தியக் காவல் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்களை சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாதமியில் பயிற்சி வழங்குவர். பயிற்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலத்தில் முதலில் உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடத்தில் நியமிக்கப்படுவர்.[3] இந்தியக் காவல் பணி அதிகாரிகள் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவர்.
குடியரசு தலைவரின் விருதுகள்

சர்தார் வல்லபாய் படேல் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை
சர்தார் வல்லபாய் படேல் தேசியக் காவல் அகாதமியின் அர்ப்பணியுடன் கூடிய சேவைக்காக 2008-இல் இந்திய அஞ்சல் துறை, அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.
மேலும் தேசியக் காவல் அகாதமியின் சாதனைகளையும், தேச சேவைகளையும் பாராட்டி, அகாதமியின் 40-ஆம் ஆண்டு விழாவின் போது, இந்தியக் குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அமைப்பு
இந்தியக் காவல் பணியில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் பணியிடத் தகுதி பெற்றவர் தலைமையில் இந்த அகாதமி இயங்குகிறது. அவருக்கு துணையாக இன்ஸ்பெகடர் ஜெனரல் பதவியில் உள்ள இரண்டு இணை இயக்குநர்களும்; துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் உள்ள மூன்று துணை இயக்குநர்களும், இருபது உதவி இயக்குநர்களும் உள்ளனர்.
காவல் பயிற்சிக்கு உதவியாக ஒரு தடய அறிவியல் ஆராய்ச்சியாளரும், ஒரு நீதித்துறை அதிகாரியும் மற்றும் கணிணி மற்றும் தொலைத்தொர்பு நிபுணர்களும் உள்ளனர்.
அகாதமியின் இயக்குநர்கள் பட்டியல்
| வ. எண் | பெயர் | மாநிலம் & ஐபிஎஸ்-ஆண்டு | பதவியேற்ற நாள் | பதவி விலகிய நாள் |
|---|---|---|---|---|
| 1 | பி எல் மேத்தா, இந்தியக் காவல் | மேற்கு வங்காளம் | 15 செப்டம்பர் 1948 | 31 சனவரி1954 |
| 2 | வார்யம் சிங், இந்தியக் காவல் | பஞ்சாப், 1941 | 11 பிப்ரவரி1954 | 5 நவம்பர் 1956 |
| 3 | ஏ ஆர் ஜெயவந்த், இந்தியக் காவல் | மத்தியப் பிரதேசம் | 8 மார்ச் 1957 | 16 மே 1958 |
| 4 | ஜி கே ஹண்டூ, இந்தியக் காவல் | ஐக்கிய மாகாணம் | 17 மே 1958 | 30 அக்டோபர் 1960 |
| 5 | பி பி பானர்ஜி, இந்தியக் காவல் | பிகார், 1934 | 14 மார்ச் 1961 | 28 பிப்ரவரி 1962 |
| 6 | எஸ் சி மிஸ்ரா | ஐக்கிய மாகாணம், 1933 | 24 மார்ச் 1962 | 7 டிசம்பர் 1967 |
| 7 | பி பி பானர்ஜி, இந்தியக் காவல் | பிகார், 1934 | 1 சனவரி 1968 | 31 சனவரி 1970 |
| 8 | ஏ கே கோஷ், இந்தியக் காவல் | பிகார் | 1 பிப்ரவரி 1970 | 10 சூலை1971 |
| 9 | எஸ் ஜி கோகலே ஐபிஎஸ் | மகாராட்டிரா, 1949 | 1 பிப்ரவரி 1972 | 31 சூலை 1974 |
| 10 | எஸ் எம் டயஸ், ஐபிஎஸ் | தமிழ்நாடு, 1949 | 11 செப்டம்பர் 1974 | 28 பிப்ரவரி 1977 |
| 11 | ஆர் டி சிங், ஐபிஎஸ் | பிகார் | 7 நவம்பர் 1977 | 4 பிப்ரவரி 1979 |
| 12 | பி ஏ ரோசா, ஐபிஎஸ் | அரியானா, 1948 | 5 பிப்ரவரி 1979 | 18 செப்டம்பர் 1979 |
| 13 | பி கே இராய், ஐபிஎஸ் | ஒடிசா, 1948 | 11 நவம்பர்1979 | 31 சனவரி 1982 |
| 14 | ஜி சி சிங்க்வி, ஐபிஎஸ் | இராஜஸ்தான், 1951 | 18 பிப்ரவரி 1983 | 30 நவம்பர் 1985 |
| 15 | ஏ ஏ அலி, ஐபிஎஸ் | மத்தியப் பிரதேசம், 1955 | 2 டிசம்பர் 1985 | 31 மார்ச் 1990 |
| 16 | பி டி மாளவியா, ஐபிஎஸ் | மத்தியப் பிரதேசம், 1957 | 12 செப்டம்பர் 1990 | 31 டிசம்பர் 1991 |
| 17 | சங்கர் சென், ஐபிஎஸ் | ஒடிசா, 1960 | 2 ஏப்ரல் 1992 | 31 மே1994 |
| 18 | ஏ பி துரை, ஐபிஎஸ் | கர்நாடகா, 1963 | 1 சூலை 1994 | 28 செப்டம்பர் 1996 |
| 19 | திரிநாத் மிஸ்ரா, ஐபிஎஸ் | உத்தரப் பிரதேசம், 1965 | 12 சூன் 1996 | 6 டிசம்பர் 1997 |
| 20 | பி வி இராஜகோபால், ஐபிஎஸ் | மத்தியப் பிரதேசம், 1965 | 29 சூன்1998 | 31 மே 2001 |
| 21 | எம் கே சுக்லா, ஐபிஎஸ் | மத்தியப் பிரதேசம், 1966 | 29 சூன் 1998 | 31 மே 2001 |
| 22 | ஞானேஸ்வர் ஜா, ஐபிஎஸ் | உத்தரப் பிரதேசம், 1967 | 11 சூலை 2002 | 31 சூலை 2004 |
| 23 | கமல் குமார், ஐபிஎஸ் | உத்தரப் பிரதேசம், 1972 | 1 அக்டோபர் 2004 | 31 அக்டோபர் 2006 |
| 24 | டாக்டர் ஜி எஸ் இராஜகோபால், ஐபிஎஸ் | இராஜஸ்தான், 1971 | 11 சூலை 2002 | 31 சூலை 2004 |
| 25 | கி. விஜயகுமார், ஐபிஎஸ் | தமிழ்நாடு, 1975 | 1 டிசம்பர் 2008 | 5 மே 2010 |
| 26 | இராஜிவ் மாத்தூர், ஐபிஎஸ் | சத்தீஸ்கர், 1974 | 22 அக்டோபர் 2010 | 30 செப்டம்பர் 2011 |
| 27 | வி என் இராய், ஐபிஎஸ் | அரியானா, 1977 | 2 நவமப்ர் 2011 | 31 டிசம்பர் 2012 |
| 28 | சுபாஷ் கோஸ்சுவாமி, ஐபிஎஸ் | அசாம், 1977 | 7 மார்ச் 2013 | 8 நவம்பர் 2013 |
| 29 | அருணா பகுகுனா, ஐபிஎஸ் | தெலங்கானா, 1979 | 28 சனவரி 2014 | 28 பிப்ரவரி 2017 |
| 30 | டி. ஆர். டோலி பர்மன், ஐபிஎஸ் | ஜம்மு காஷ்மீர், 1986 | 1 மார்ச் 2017 | 29 மார்ச் 2019 |
